ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தாரா? லதா அளித்த மழுப்பல் விளக்கம்! நடந்தது என்ன?
சமீபத்தில் சென்னையில் நடைபெற்று முடிந்த துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழாவில் பத்திரிக்கை ஆசியரான மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.அவர் இந்த விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்த போதே அது அரசியலாக பேசப்பட்டது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த மாதிரியே அவர் பேச்சு தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
அதாவது விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசிய போது,1971 ஆம் ஆண்டு உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார் என்று குறிப்பிட்டார். மேலும் அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பதிவு செய்யவில்லை என்றும், ஆனால்,துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரான ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார் என்றும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் இந்த செய்தியை வெளியிட்ட துக்ளக் பத்திரிக்கையை ரத்து செய்தார்கள். ஆனால் இதனைக்கண்டு கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் பத்திரிக்கையை சோ வெளியிட்டார். இதனையடுத்து அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது. இதன் மூலமாக பத்திரிக்கை உலகில் சோ மிகவும் பிரபலமானார் என்றும் நடிகர் ரஜினிகாந்த் அந்த விழாவில் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் பேசிய இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள் நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது போயஸ்தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து இதற்காக விளக்கம் அளித்தார். அதில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், பேசிய கருத்து உண்மை என்றும் அதற்கான ஆதாரத்தை காட்டி உறுதியாக கூறினார்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் அளித்த இந்த பேட்டி தான் பெரியார்வாதிகளையும் திராவிட கட்சிகளையும் அவருக்கு எதிராக விமர்சனம் செய்ய வைத்துள்ளது. பல ஆண்டுகளாகவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி வந்தாலும் இது வரை அவர் தெளிவாக எந்த ஒரு முடிவும் அறிவித்ததில்லை. இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக ரஜினியை வைத்து தமிழகத்தில் காய் நகர்த்துவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சம்பந்தமேயில்லாமல் பெரியார் பற்றி கருத்து தெரிவிக்க அதற்கு திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதும், ரஜினிக்கு ஆதரவாக பாஜகவினர் செயல்பட்டு வருவதும் ஏறக்குறைய இரு பிரிவினருக்கும் இடையேயான மறைமுக தொடர்பு இருப்பதை உறுதிபடுத்துகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் பெரியார் மற்றும் ரஜினியின் கருத்துகள் தான் வைரலாகி பரவிக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கமாக காட்டி கொள்ளும் திமுகவிற்கு எதிராக ரஜினி ரசிகர்களும் பாஜக தொண்டர்களும் கடுமையான விமர்சனங்களை பரப்பி வருகின்றனர். இதில் முரசொலி, மூலப்பத்திரம், பெரியார் வளர்ப்பு மகளை திருமணம் செய்தது என எதையும் விட்டு வைக்காமல் என்று கலங்கடித்து வருகின்றனர்.
பதிலுக்கு திமுகவினரும் ரஜினியின் கடந்த கால திரை வாழ்க்கை, தமிழக மக்களின் மீது அவர் கொண்டிருந்த ஓரவஞ்சனை என்று தங்கள் விருப்பம்போல விமர்சன கருத்துகளை பரப்பி வருகின்றனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்கள் முழுக்க ரஜினி Vs திராவிட கட்சிகள் என்று ஆதரவு மற்றும் விமர்சன பதிவுகளாக காணப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் கடந்த கால சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை வைத்து அவரது எதிர்ப்பாளர்களான திமுகவினர் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக நடிகை லதா விவகாரத்தில் ராமாவரத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர் அடித்தார் என்று பேசப்பட்டு வருவதை குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல ஊடகம் ஒன்றில் நடிகை லதா இது குறித்து அளித்த விளக்கமான அந்த பேட்டியை ரஜினி ரசிகர்களும் பரப்பி வருகின்றனர்.
அந்த வீடியோவில் ரஜினிகாந்த் நடிகை லதாவை ஒருதலையாக காதலித்ததாகவும், அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கோபம் அடைந்த எம்.ஜி.ஆர். அவரை ராமாவாரம் தோட்டத்தில் வைத்து அடித்ததாகவும் பல ஆண்டுகளாக பேசப்படுகிறது .அந்த லதாவுடன் சேர முடியாத காரணத்தால் அதே பெயருடைய மற்றொரு பெண்ணை திருமணம் செய்தார் என்றும் கூறப்பட்டது இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என பத்திரிக்கையாளர் கேட்கிறார்.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக பதிலளித்த நடிகை லதா கூறியதாவது. பாவம் அவரை பற்றி வேறு எதுவுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறார்கள் போல. ரஜினி பற்றி ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி சொல்கிறார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் அது பற்றி எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்று மழுப்பலாக பதிலளித்தார். இதன் மூலமாக ராமாவரம் தோட்டத்தில் நடிகர் ரஜினிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய வதந்தி மர்மமாகவே உள்ளது.