டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தகவல்கள்!!
அஇஅதிமுகவின் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கும், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கும், கட்சியிலிருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்குவதற்குமான உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடைய ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து, தீர்மானங்களையும், பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அவற்றுக்கு தடை விதிக்க கடந்த மார்ச் 28-ஆம் தேதி மறுத்துவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்ததுடன, விசாரணையை ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரித்து. அவற்றை இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி அஇஅதிமுக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி சார்பில் வழக்குரைஞர் பாலாஜி சீனிவாசன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.கர்நாடகத்தில் கடந்த காலத்தில் அஇஅதிமுக கோலார், கோலார் தங்க வயல், காந்திநகர் ஆகிய சட்டப்பேரவைகளில் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகத்தில் அஇஅதிமுகவுக்கு மூன்று சதவீத வாக்கு சதவீதம் உள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்களை நிறுத்த கட்சி திட்டமிட்டுள்ளது. எனவே வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையிலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வகையிலும், கட்சியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும்.
ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதன் இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அஇஅதிமுகவின் ரிட் மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம். சிங் ஏப்ரல் 10-ஆம் தேதி விசாரிக்கவுள்ளார்.