தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கானோர் இந்த மாநாட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி தமிழகத்தை சுற்றியுள்ள இடங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக வெற்றிக் கழகம் சில வரைமுறைகளை வகுத்துள்ளது.
இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் தனது ரசிகர்களுக்கு கூறிய அறிவுரைகள் :-
இரு சக்கர வாகனங்களில் வராதீர்கள்.காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சாலை விதிகளைப் பின்பற்றுங்கள். மாநாடுக்கும் காவல் படைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று ரசிகர்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நிறைய அறிவுரைகளைத் தெரிவித்து இருந்தார்.
கர்ப்பிணிகள், குழந்தைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மாநாட்டுக்கு வரவேண்டாம். மாநாட்டினை நீங்கள் வீட்டுலேயே இருந்து டிவியில் பாருங்கள் என்று விஜய் தன் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு தெரிவித்து இருந்தார்.
பெரும்பாலும், ஒரு மாநாடு நடக்கிறது என்றால் தோராயமாக தான் அதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை கூற முடியும். ஆனால் தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கூற அக்கழக நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர். இதற்காக மாநாட்டின் நுழைவுப் பகுதியில் கியூ ஆர் ஸ்கேன் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநாட்டில் பங்கேற்கும் அனைவரும் இந்தக் கியூ ஆர் ஸ்கேனை ஸ்கேன் செய்தால் அவர்களுக்கு இந்த மாநாட்டில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் கிடைக்கும் வகையில் கழக நிர்வாகிகள் செய்துள்ளனர்.
மேலும் விக்கிரவாண்டி தொகுதியில் என்று மாநாடு நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எப்பொழுதும் 12 மணிக்கு மேல் திறக்கப்படும் மதுபான கடைகளை இன்று 12 மணிக்கு பிறகும் விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் உள்ள பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என பிறப்பிக்கப்பட்டுள்ளது.