பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது எப்போது? அமைச்சர் கூறிய பதில் இதோ!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக மூடப்படிருந்த பள்ளிகள், கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு சற்று குறைந்ததையடுத்து சமீபத்தில் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பரவலின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
எனவே இந்த முறை கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி வந்தார். அதன்படி பொதுதேர்வுக்கான கால அட்டவணை மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களான 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து பேசுகையில்,
இந்த கொரோனாவின் காலகட்டத்தில் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது. அந்த வகையில் பள்ளிகளும் தாமதமாகவே திறக்கப்பட்டன. வருகிற மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. அது முடிந்த பிறகு பாடத்திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். எனவே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும் என்று கூறினார்.