ஜாதகம் எப்போது பார்க்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்!

Photo of author

By Rupa

ஜோதிடம் என்பது ஒரு வகையான சாஸ்திரம். இன்னும் சொல்லப்போனால் ஒருவரை பற்றி சரியாக எழுதக்கூடிய ஒரு வகையான கணக்கு. அப்படி எழுதக்கூடிய ஒருவரின் ஜாதகத்தை எப்பொழுதெல்லாம் பார்க்கலாம் அல்லது எப்பொழுதெல்லாம் பார்க்க கூடாது என்று சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு.

அதனைப் பற்றி தற்போது விரிவாக காண்போம்.
நமக்கு எப்பொழுது அவசியம் என்று தேவைப்படுகிறதோ அப்பொழுது மட்டும் ஜாதகம் பார்ப்பது நல்லது. ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கான நட்சத்திரம், லக்னம், ராசி போன்றவற்றை எழுதி தருவார்கள். அதன் பிறகு பெண் குழந்தைகளாக இருந்தால் பூப்பெய்தியவுடன் ருது ஜாதகம் என்ற ஒன்றை எழுதுவார்கள். இவ்வாறு எழுதிய ஜாதகத்தை அக்குழந்தைகள் பெரியவர்களாக வளரும் வரையில் அப்படியே வைத்து விட வேண்டும்.

பிறகு அக்குழந்தை மேற்படிப்பிற்காக எந்த துறையை தேர்வு செய்யலாம், வெளிநாடுகளுக்கு செல்லலாமா என்பது குறித்து அறிய ஜாதகத்தினை பார்க்கலாம். அதன் பிறகு அக்குழந்தையின் திருமண வயதின் போது பொருத்தம் பார்ப்பதற்கு என அந்த ஜாதகத்தினை பார்க்கலாம். பெண் குழந்தைகளாக இருந்தால் அக் குழந்தையின் பிறந்த ஜாதகம் மற்றும் ருது ஜாதகம் ஆகிய இரண்டையும் வைத்து பொருத்தம் பார்க்கலாம்.

திருமணத்திற்குப் பிறகு குழந்தை வரம் கிடைக்கவில்லை அதாவது திருமணம் ஆகி 7, 8 வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் கரு உருவாகவில்லை அல்லது கரு கலைந்து விடுகிறது என்றாலோ அதற்காக ஜாதகத்தினை பார்த்து தீர்வு கண்டு அதற்கான வழிபாடுகளை செய்யலாம்.
சில நேரங்களில் தீராத நோய்கள் ஏற்பட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் இருக்கும் அந்த சூழ்நிலைகளில் நமது ஜாதகத்தினை பார்க்கலாம்.

வாழ்க்கையில் எந்த முன்னேற்றமுமே இல்லை, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது, அடி மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது, பல்வேறு சிக்கல்களில் காரணமே இன்றி மாட்டிக் கொள்கிறோம் என்கின்ற பொழுது நமது ஜாதகத்தினை பார்க்கலாம். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மட்டுமே நமது ஜாதகத்தினை எடுத்துப் பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என ஜாதகத்தினை பார்க்க கூடாது.

எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அடுத்து எனது வாழ்வில் என்ன நடக்கப் போகிறது? எனது ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் எங்கு இருக்கிறது? என்று எந்த பிரச்சனையுமே இல்லாமல் ஜாதகத்தினை பார்க்க கூடாது.
இந்த நாள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த நாள் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கெல்லாம் ஜாதகத்தினை பார்க்க கூடாது. எனவே நமக்கு ஒரு பிரச்சனை என வரும் பொழுது மட்டுமே ஜாதகத்தினை பார்ப்பதன் மூலம் மன அமைதியைப் பெற்று சந்தோஷமாக வாழலாம்.

அப்படி இல்லாமல் அடிக்கடி ஜாதகம் பார்ப்பது, நமது வாழ்வில் அடுத்து என்ன நிகழப் போகிறது என ஆர்வத்துடன் அறிந்து கொள்வது இவை எல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்தி வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போகும்.