அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! பள்ளி திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் சற்றே குறைந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அந்த அடிப்படையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியது.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தது. அதில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் எல்.கே.ஜி. யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் ப்ளே ஸ்கூல் என்ற மழலையர் பள்ளிகளையும் திறப்பது குறித்தும்,1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்தும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று வெளியான தமிழக அரசின் அறிவிப்பில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் திறக்கப்படாது என்றும், தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழலையர், நர்சரி பள்ளிகளை திறப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்றானது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் அந்நாடுகள் அனைத்தும் மீண்டும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கி வருகின்றன.இதன் அடிப்படையில் தான் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதபடுகிறது.