எங்க தலைவர் பேனரையே எடுக்கிறீங்களா! அரசு ஊழியர்களை தாக்கிய பாஜக நிர்வாகிகள்!
அரசியல்வாதிகள் கட்சி கூட்டம் என்று பொது இடத்தில் வைத்து விட்டாலே பெரும்பான்மையாக போஸ்டர் ஒட்டுவது பேனர் கட்டுவது என்று பெரும் அலப்பறையாக இருக்கும். அவ்வாறு ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இதுபோல் போஸ்டர் மற்றும் பேனரால் பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதனை அடுத்து ஜெயலலிதா அவர்கள் புதிய உத்தரவை அமல்படுத்தினார். இனி அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் எந்த இடத்திலும் பேனர்கள் வைக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார். அதன் பிறகு பேனர் வைப்பது கணிசமாக குறைந்தது. தற்போது வரை ஏதேனும் கூட்டம் நடைபெற போகிறது என்றால் பேனர் வைப்பதற்கு அனுமதி பெறுவது கட்டாயம். அந்த வகையில் நேற்று பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பாஜகவில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த பிறகு நடக்கும் முதல் கூட்டம் இதுதான். இந்த ஆலோசனைக் கூட்டம் ஆனது மதுரையில் அழகர் சாலையிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். மேலும் அவருடன் தேசிய செயற்குழு உறுப்பினர் மற்றும் சட்டமன்ற குழு தலைவர் என அனைவரும் கலந்து கொண்டனர். இவர்கள் கூட்டம் நடைபெறும் ஹோட்டல் எனத் தொடங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அண்ணாமலை மற்றும் முக்கிய நிர்வாகிகள் அச்சிடப்பட்ட பேனர்கள் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த பேனர்கள் வைப்பதற்கு பாஜக நிர்வாகிகள் அதற்கு அனுமதி பெறவில்லை. மேலும் இந்த பேனர்கள் மக்கள் செல்லும் வழியில் இடையூறாக இருப்பதால் மதுரை மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை அகற்றினர்.
அவர்கள் அகற்றிய போது அங்கிருந்த பாஜகவினர் ஓடிவந்து மாநகராட்சி ஊழியர்கள் தாக்கினர். இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டு சிறிது நேரத்திலேயே அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை அடுத்து தாக்கியதால் காயம் ஏற்பட்ட மாநகராட்சி ஊழியர் களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய பாஜகவினர் 25 பேர் மீது காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.