2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது அதிமுகவா? அல்லது திமுகவா? என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் இருக்கிறது. அதிமுக, திமுக இரண்டுமே பலம் வாய்ந்த கட்சிகள்தான். ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டுக்கும் இடையேயான வாக்கு வங்கி வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஜெயலலிதா மறைவு, சசிகலா, கூவத்தூர் அவலங்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, லாக்கப் மரணம் என்று ஏறக்குறைய அதிமுக அதன் அழிவு அத்தியாயத்தின் இறுதி பக்கங்களை எழுத்துக்கொண்டிருந்த நேரம். திமுக ஆட்சியமைக்கும் என்பது எல்லோராலும் 100 சதவீதம் யூகிக்க முடிந்த ஒன்றாகவே இருந்தது. கிட்டத்தட்ட அதிமுக வாஷ் அவுட் என்ற நிலையை அனைவரும் எதிர்பார்த்தனர். கூடவே பாஜக கூட்டணியும் அதிமுகவிற்கு மிகப்பெரிய சுமையாக கருதப்பட்டது.
திமுக அமோக வெற்றி, அதிமுக வரலாறு காணாத தோல்வி என்ற முடிவுகளை எதிர்பார்த்திருந்த பலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் ஒன்று காத்திருந்தது. அதிமுகவிற்கு 20 சதவீதத்திற்கும் குறைவாகவே வாக்குகள் கிடைக்கும் என்ற யூகங்கள் பொய்த்துப் போயின.
2021-ல் திமுக 188 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொகுதிகளில் வென்றது, கட்சி பெற்ற வாக்குகள் 1,74,30,179, அதாவது 37.70 சதவீதம். ஆனால் அவ்வளவு எதிர்ப்புகளுக்குமிடையே பாஜக-வுடன் கூட்டணி வைத்தும் அதிமுக 2021-ல் 191 தொகுதிகளில் போட்டியிட்டு 66 தொகுதிகளை வென்றது. அந்த கட்சி பெற்ற மொத்த வாக்குகள் முறையே 1,53,91,055, அதாவது 33.3 சதவீதம். அதிமுக-பாஜக கூட்டணி பலவீனம், திமுக எளிதான வெற்றி என்ற கண்ணோட்டம் இருந்த 2021 தேர்தலில் திமுக-விற்கும் அதிமுக-விற்கும் இடையே இருந்த வாக்குகளின் வித்தியாசம் வெறும் 20 லட்சம்தான்.
அந்த நம்பிக்கைதான் 2023 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கழட்டிவிட்டு போட்டியிடலாம் என்கிற நம்பிக்கையை எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்தது. ஆனால், இந்தமுறை மத்தியில் பாஜக தோற்கும் என்றே பழனிச்சாமி கணக்கு போட்டார். ஆனால், 3வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துவிட்டது. இதை பழனிச்சாமியே எதிர்பார்க்கவில்லை. அதோடு, மகராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. எனவே, இப்போது பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்கிற நம்பிக்கை பழனிச்சாமிக்கு வந்திருக்கிறது.
விஜய், சீமான் போன்றவர்களை கூட்டணியில் சேர்க்கலாம் என கணக்குப் போட்டார் பழனிச்சாமி, ஆனால், அதிக இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி போன்றவற்றை விஜய் கேட்க அது நடக்கவில்லை. சீமானோ தனித்துபோட்டி என சொல்லிவிட்டார். எனவேதான், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பழனிச்சாமி. இதில் திமுக எதிர்ப்பு ஓட்டுகளை அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் பிரிக்கும்.
இது அதிமுகவுக்கு சாதகமாக அமையுமா இல்லை திமுகவிற்கு சாதகமாக அமையுமே என்பதே தேர்தல் முடிவில்தான் தெரியவரும்!..