ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தலாம்? வெள்ளை மாளிகை கடும் எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

கடந்த 24ஆம் தேதி ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நாட்டின் மீது திடீரென்று போர் தொடுத்தது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். மேலும் ஐ.நா. சபை போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தது, ஆனாலும் இதனை ரஷ்யா கேட்கவில்லை.

இந்த நிலையில், 14 நாட்களை தாண்டி உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யப் படைகள் கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன.

உக்ரைனிலுள்ள 5 முக்கிய நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது ரஷ்யா.

இதனிடையே ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜாகரோவா உக்ரைன் தன்னுடைய பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை செய்திருக்கிறது.

இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி தெரிவிக்கும்போது ரஷ்யாவின் கருத்து அபாண்டமானது உக்ரைனுக்கு எதிராக இது போன்ற பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.