அடுத்த ஆப்பு யாருக்கு?? மீண்டும் தொடங்கிய வருமானவரி சோதனை !!
மீண்டும் வருமான வரித்துறையினர் கரூரில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலைவாங்கித் தருவதாக மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் அவரது வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் மே மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை தீவிர சோதனை நடைபெற்றது. சென்னை, கரூர், கோவை, ஈரோடு, ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் மட்டும் 8 நாட்கள் தொடர் சோதனை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் 13-ஆம் தேதி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அவரது பெற்றோர் வசிக்கும் வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர் வீடு என பல பகுதிகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சூழ்நிலையில் வருமான வரித் துறையினர் மீண்டும் இன்று கரூரில் மூன்றாவது கட்ட சோதனையை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் கொங்கு மெஸ் மணி என்பவரது ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சோதனையை மேற்கொண்டனர்.