“அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?” மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி

Photo of author

By Parthipan K

“அனைத்தையும் தளர்த்திய பிறகும் எதற்கு மீண்டும் ஊரடங்கு?” மத்திய மாநில அரசுகளுக்கு கனிமொழி சரமாரி கேள்வி

Parthipan K

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை என அறிவித்த பிறகு, எதற்கு மீண்டும் ஊரடங்கு வேண்டும்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி அத்தைக்கொண்டான் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என திமுக போராடி வருகிறது.

 

நீட் தேர்வு மாணவர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட ஒரு பெண் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இப்படி இன்னும் எவ்வளவு இழப்புகளை சந்திக்க இருக்கிறோம்?” என கேள்வி எழுப்பினார்.

 

மேலும், “நீட் தேர்வினை தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது. நீட் தேர்வுக்கு நாம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

 

அப்படிச் செய்யாவிட்டால் அது நம் மக்களுக்கு அரசு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகமாக அமைந்து விடும்” எனக் கூறினார்.

 

மேற்கொண்டு பேசிய அவர், “கொரோனா நடவடிக்கையில் தமிழக அரசு மிகவும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மிகவும் மோசமான நிலையை உருவாக்கியுள்ளது.

 

இதில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளன. கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதை நாம் பார்த்து வருகிறோம். எந்த ஒரு தெளிவு இல்லாமல் மத்திய அரசு முடிவுகளை எடுக்கிறது.

 

அதனைத் தொடர்ந்து மாநில அரசும் இன்னொரு முடிவினை எடுக்கிறது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இதற்குப் பிறகும் ஊரடங்கினைக் கொண்டுவருவது என்ன அர்த்தம் இருக்கப் போகிறது? இதனால் பல்வேறு பிரச்சினைகள்தான் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

 

இது லஞ்சம் வாங்கவே வாய்ப்பளிக்கும். இந்த முடிவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலைமை தான் தொடரும்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.