பாமக தலைவராக இனி நானே செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக செயல்படுவார் என திடீரென மருத்துவர் ராமதாஸ் அறிவித்தது அக்கட்சியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் மருத்துவர் ராமதாஸ் சமாதானம் செய்ய முயற்சிக்கும் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல இரண்டு நாட்களாக அமைதி காத்த அன்புமணி ராமதாஸ் இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கட்சியின் தலைவராக தானே தொடர்வதாக தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவராக பொறுப்பேற்ற தன்னை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்துள்ளதையும் அவர் அதில் சுட்டி காட்டியுள்ளது கட்சியினர் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.மருத்துவர் ராமதாஸ் அறிவித்ததை தான் ஏற்கவில்லை என்பதையே இந்த அறிக்கையும் தெளிவுபடுத்தியது.
இந்நிலையில் இன்று காலை தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை அதிமுகவின் மூத்த நிர்வாகி சைதை துரைசாமி சந்திக்க வந்துள்ளது தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டணி விவகாரமா அல்லது உட்கட்சி விவகாரமா என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த சந்திப்பின் பின்னணி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய சைதை துரைசாமி குரூப் 1 தேர்வு வெற்றி பெற்ற மாணவி MBC பிரிவை சேர்ந்த வன்னியர் சமூக மாணவி என்பதால் அவர் தனக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் இதனையடுத்து அதற்கு அவருக்கு நன்றி தெரிவிக்க வந்ததாகவும் கூறினார்.மேலும் அவரிடம் அன்புமணி ராமதாஸ் விவகாரம் குறித்து கேட்டதற்கு இங்கு அரசியல் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.