
கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அன்றைய தினம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் தனது அண்ணன் இறந்த துயரத்தில் ஆழ்ந்தார். பின்னர் இறப்பு காரியங்கள் அனைத்தும் முடிந்த பிறகு முதல்வர் தனது வீட்டிற்கு கிளம்பி சென்றார்.
அடுத்த நாள் எப்பவும் போல் முதல்வர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக முதல்வரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் மக்கள் பணி செய்துவருவதால் அவர் சிறிது நாட்கள் வீட்டில் இருந்து மருந்து எடுத்துக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவர்கள் முதல்வருக்கு அறிவுரை வழங்கினர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டே அரசு பணிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகின. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது ஏன் முதல்வரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது அரசு சார்பில் அதிக பாதுகாப்புகள் வழங்கப்படும். இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பொதுமக்களின் சேவை பாதிக்கப்படும். மக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக தான் முதல்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று பதிலளித்தார். சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த பதில் மக்கள் நம்பும்படி இல்லை என்றும், அரசு மருத்துவமனையில் கொடுக்கப்படும் மருத்துவம் தரமாக இருக்காது என்று தான் முதல்வரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள் எனவும் மக்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.