அதிமுக உடனான தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளின் கூட்டணி நீடிக்குமா!
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தேர்தல்களத்தில் களமிறங்கியது.தற்போது சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தேமுதிக மற்றும் பாஜக கட்சிகளுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டு கட்சிகளும் அதிமுக உடனான கூட்டணி குறித்து இருவேறு கருத்துக்களை கூறியிருப்பது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அண்மையில் தேமுதிக தலைவரான விஜயகாந்தின் பிறந்த நாளில் பேட்டியளித்த திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்,விஜயகாந்த் கிங்காக இருக்கவேண்டுமென்றும், தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள் என்றும்,
தனித்து போட்டியிட நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்னும்
கூறியிருந்தார். இந்நிலையில் வருகின்ற ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முக்கியமான அறிவிப்பை வெளியிடுவார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
இதுகுறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகள் மட்டும்தான் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை, என்பதனை தற்போது மக்கள் உணர்ந்து விட்டனர்.அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பொழுது,நிறைகளும் குறைகளும்,உடைய
ஆட்சியாகதான் பார்க்கின்றோம் என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அதிமுக உடனான கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளதாவது
அதிமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும்,பாஜக தற்போது தமிழகத்தின் வலுவான நிலையை அடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதுமட்டுமின்றி தனித்து நின்றாலும் 60 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது அதிமுக உடனான கூட்டணியில் இருக்கும் இரண்டு கட்சிகளும் இருவேறு கருத்துக்களை கூறியிருப்பது அதிமுக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.