கடலூர் திமுக எம்பி விவகாரம்! காவல்துறையின் மீது இழந்த நம்பிக்கை!

Photo of author

By Sakthi

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பணிக்கன் குப்பம் ஊராட்சியில் திமுகவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்கு சொந்தமான ஒரு முந்திரி ஆலை உள்ளது. இந்த முந்திரி ஆலையில் மேல்மாம்பட்டு கிராமத்தைச் சார்ந்த கோவிந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார்.

அவர் மீது அந்த முந்திரி ஆலையிலிருந்து முந்திரியை திருடி வெளியில் விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 19ஆம் தேதி ஆலை உரிமையாளரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் மற்றும் அந்த ஆலையில் வேலை செய்யும் ஒரு சில நபர்கள் உள்ளிட்டோரும் ஒன்றுகூடி கோவிந்தராஜ் அவர்களை தாக்கி இருக்கிறார்கள். அன்றைய தினமே கோவிந்தராஜன் தொலைபேசி எண்ணிலிருந்து மகன் செந்தில்வேல் அவர்களுக்கு இரவில் அழைப்பு வந்தது. இதில் பேசிய ஒருவர் தங்களுடைய தந்தை விஷம் குடித்து விட்டு மரணம் அடைந்து விட்டார் என்று தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த செந்தில் வேல் இது தற்கொலை அல்ல கொலை என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இந்த மர்ம மரணம் குறித்து காடாம்புலியூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.இந்தநிலையில், தற்சமயம் ஒரு முக்கிய தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது, காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு கோவிந்தராஜு புகார் கொடுக்க வரவில்லை. முந்திரி ஆலை மேலாளர் நடராஜ் மற்றும் வினோத் உள்ளிட்ட இருவரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் கோவிந்தராஜ அழைத்து வந்து அவர் மீது திருட்டு புகார் கொடுத்து வழக்கை பதிவு செய்ய சொன்னார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அந்த சமயத்தில் அங்கே பணியில் இருந்த காவல்துறையினர் இவ்வாறு அடிபட்டு ரத்தக் காயத்துடன் இருக்கின்றார். இவரை முதலில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை அளியுங்கள் எதுவாக இருந்தாலும் காலை பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. உடனடியாக கோவிந்தராஜ் மீண்டும் முந்திரி கம்பெனிக்கு அழைத்து சென்று அங்கே அவரை தாக்கியதில் எக்குத்தப்பாக அடிபட்டு கோவிந்தராஜ் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் அவருக்கு வாய் மற்றும் காதுகளில் மருந்தை ஊற்றி விட்டு பண்ருட்டி மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள் என கூறுகிறார்கள்.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் தாமரைக்கண்ணன் தெரிவித்ததாவது, முந்திரி திருடி விட்டார் என்று கோவிந்தராஜன் அவர்களை திட்டி இருந்தேன். இதன் காரணமாக, தான் அவமானம் தாங்காமல் மருந்தை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனாலும் அப்படி நடந்திருந்தால் கூட அவர் மீது தற்கொலைக்கு தூண்டினார் என்று வழக்கு பதிவு செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தியும் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பதன் காரணமாகவும் தொழிலாளி கோவிந்தராஜ் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்கிய அவர் மீது திருட்டு வழக்கு போடுவதற்கு காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு இரவு சமயத்தில் அழைத்து வந்த சமயத்தில் அங்கு இருந்த காவல்துறையினர் ரத்த காயத்துடன் இருப்பதை கண்டதும் அதை பார்த்தும் கூட எதுவும் சொல்லாமல் திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் என ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்.

அன்றிரவே நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்களுக்குச் சொந்தமான முந்தரி காலையிலிருந்து ஒரு தொழிலாளியை அடித்து காவல் நிலையத்திற்கு இழுத்து வந்தார்கள் என்ற செய்தி மேலதிகாரிகளுக்கு கூறப்பட்டது. ஆனாலும் மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்பிரிவுக்கும் சிபிசிஐடி காவல் துறையினருக்கும் காலையில்தான் தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். ஒருவேளை அன்று இரவே அதிகாரிகள் தங்களுடைய பணிகளை சரியாக செய்திருந்தால் கோவிந்தராஜன் காப்பாற்றியிருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் பாமக பிரமுகர் தாமரைக்கண்ணன்.

ஆனால் இத்தனை தகவல்கள் கிடைத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கொலைக்கு காரணமாக இருந்தார் எனவும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதற்கு மாறாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருப்பது காவல்துறையின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது என கூறியிருக்கிறார் தாமரைக்கண்ணன்.