காபூலில் இருந்து ஒரே நாளில் இத்தனை பேர் வெளியேற்றமா? வெள்ளை மாளிகை சொன்ன செய்தி!
ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி தலிபான்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் நாடே அச்சம் கொண்டுள்ளது. ஆனால் அவர்களோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நாங்களும் மனிதர்கள் தான். கொஞ்சம் சட்ட திட்டங்களை மதித்து நடங்கள் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள். ஆனால் அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. தற்போது ஆப்கனை கைப்பற்றி உள்ளதால் தங்கள் நாட்டு குடிமக்களை அனைத்து உலக நாடுகளும் விமானங்கள் மூலம் மீட்டு கொண்டு வருகின்றன.
மேலும் விமான நிலையம் அருகே அனைத்தும் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கனில் உள்ள அமெரிக்கா படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனால் ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்துள்ளனர். இந்நிலையில் அந்த விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
அங்கு நேற்று முன் தினம் மாலையில் அந்த வெடி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் 175 பேர் வரை அங்கு மரணமடைந்துள்ளனர். அதில் 13 பேர் அமெரிக்க படையை சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்றும் மற்றவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் பொது மக்கள் என்றும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தற்போது பொறுப்பேற்றுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை நாங்கள் கண்டிப்பாக வேட்டையாடும் எனவும், இதற்கு பதில் அவர்கள் தந்தே ஆக வேண்டும் என்றும், அதற்கு விலை கொடுக்கும்படி செய்வோம் என்றும் கூறியுள்ளார். இந்த காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் வருகிற 30-ஆம் தேதி மாலை வரை அமெரிக்கக் கொடி அரை கம்பத்தில்தான் பறக்க விடப்படும் என்றும், வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
நேற்று முதலே அங்கு அரைக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இதே போன்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து கடந்த 14ம் தேதியிலிருந்து இதுவரை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபுலில் இருந்து கடந்த 12 மணிநேரத்தில் மட்டும் 4 ஆயிரத்து இருநூறு பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
காபுல் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை 90 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது அந்த உயிரிழப்பு 175 ஆக உயர்ந்துள்ளது. காபூல் விமான நிலையத்திற்கு வெளியே 5400 பேர் விமானங்களுக்காக காத்து இருக்கின்றனர் எனவும் அமெரிக்க மேஜர் ஜெனரல் வில்லியம் ஹேங் டெய்லர் தெரிவித்துள்ளார்.