தேமுதிகவுக்கு கைகொடுக்குமா 2024 தேர்தல்? விஜயகாந்தின் எம்.பி கனவு என்னவாகும்?
விஜயகாந்த் மறைவுக்கு பின்னர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக களம் காணும் நிலையில், இந்த தேர்தல் அவர்களுக்கு சாதகமாக அமையுமா? சறுக்கலாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜயகாந்த்தின் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சோகத்தில் மூழ்கியிருந்த நிலையில், இந்த தேர்தல் அவர்களை சற்றே புத்துணர்வுபெற வைத்துள்ளது.தங்களது தலைவரின் மறைவுக்கு பின்னர் அவரது கனவை தாங்கள் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவுக்கு அனுதாப வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வெற்றி வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த தேர்தலில்கூட தேமுதிகவுக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை.களத்தில் இறங்கி வேலை பார்த்தாலும், இந்த கூட்டணி எந்தளவுக்கு வாக்குகளை கைப்பற்றி வெற்றியை நோக்கி பயணிக்கும் என்பது தெரியவில்லை.
அதேநேரம் விஜயகாந்த் மறைவுக்கு பின்னர் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், அவரது ஆசையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தொண்டர்கள் தீவிரமாக இருக்கின்றனர்.தங்களுக்கு ஒரு எம்.பி சீட்டு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடுதான் பிரேமலதா அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார். இருப்பினும் அதிமுக கூட்டணி வென்றால்தான் இவை அனைத்து நிறைவேற சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுகவுக்கு அடுத்து அதிக இடங்களை பிடித்தால்தான் அதிமுக இரண்டாவது வெற்றி கூட்டணியாக இருக்கும்.ஆனால் இந்த போட்டிக்குள் புதிதாக நுழைந்துள்ள பாஜகவால் அது நிறைவேறுமா? என்ற சந்தேகமும் இங்கே இருப்பதால் தேமுதிகவுக்கான வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.