தேர்தல் நெருங்க நெருங்க ஆளுங்கட்சியான அதிமுகவிற்கும் எதிர்கட்சியான திமுக விற்கும் தோற்றங்கள் வெவ்வேறாக மாறிவருகின்றது.எதிர்வரும் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை பலமுனை போட்டிகள் நிலவி வருவதால் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதில் மக்கள் இன்னமும் தெளிவாக கணிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் வெளியிடப்படும் கருத்துக்கணிப்பில் கூட மிக நெருங்கிய வித்யாசம் தான் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் அப்படி இருக்கும்போது மக்கள் எந்த கட்சியின் பக்கம் செல்வார்கள் என்பதை இதுவரையில் யாராலும் உறுதியாகக் கூற முடியவில்லை. வெற்றி யார் பக்கம் வந்து சேரும் என்பதையும் இதுவரையில் யாரும் உறுதியாக கூறவில்லை.
ஜாதி ரீதியாக பார்த்தோமானால் வன்னியர்களின் பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருப்பதால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு பெற்றிருந்தாலும் அந்த ஓட்டுகள் அதிமுகவிற்கு விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனாலும் அதிலும் கூட ஒரு சிக்கல் இருக்கிறது என்ன தான் இட ஒதுக்கீடு பெற்று தந்திருந்தாலும் வன்னியர்களில் பலர் திமுகவில் இருந்து வருகிறார்கள். ஆகவே அவர்களின் மனநிலையை மாற்றுவது மிகக் கடினம் என்ற காரணத்தால், ஒட்டுமொத்த வன்னியர்களின் வாக்குகளும் அதிமுக பக்கம் வந்துவிடாது என்பதுதான் நிதர்சனம்.
எப்பொழுதுமே கோவை மாவட்டத்தில் கொங்கு பகுதியில் அதிமுக அசுர பலத்துடன் இருந்து வந்திருக்கிறது. அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்தில் ஆனால் தற்சமயம் அந்தப் பகுதியில் திமுக வலிமையாக இருக்கிறது என்று ஒரு கருத்து நிலவி வருகிறது.அதோடு வெற்றியின் சதவீதத்தை பார்த்தோமானால் இந்தமுறை அனேக இடங்களில் திமுக மற்றும் அதிமுக என்று இரு கட்சிகளுமே நேருக்கு நேர் சந்திப்பதற்கான நிலை உருவாகி இருக்கிறது.
ஒருவேளை திமுக கூட்டணி கட்சிகளை அதிமுக சந்தித்தால் நிச்சயமாக வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கும் எளிதாக வென்று விடலாம். ஆனால் தற்சமயம் அப்படி அல்ல கூட்டணி கட்சிகளை முழுமையாக நம்பாமல் தானே நேரடியாக களம் இறங்குகிறது திமுக.அப்படி இருக்கும்போது இரண்டு கட்சிகளுக்குமே வெற்றி என்பது பெரிய வித்தியாசத்தில் இருக்காது. நூலிழை அளவில்தான் அந்த வெற்றியின் வித்தியாசம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.