ஞாயிறு முழு ஊரடங்கு கைவிடப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

Photo of author

By Parthipan K

ஞாயிறு முழு ஊரடங்கு கைவிடப்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

கொரோனா தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி சுமார் இரண்டு ஆண்டுகளாக பல உருமாற்றங்கள் அடைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் நாட்டையே நிலைகுலைய செய்தது.

அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடுமையான தடுப்பு நடவடிக்கைக்கு பிறகு கொரோனா பெருந்தொற்றானது கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த வைரஸ் கண்டறியப்பட்டது. இதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டது.

இந்த வைரஸ் கண்டறியப்பட்ட குறுகிய காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு பரவத் தொடங்கியது. இதன் காரணமாக இந்த வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருந்தது. இந்த நிலையில் இந்தியாவிலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் நுழைந்தது கடந்த மாதம் கண்டறியப்பட்டது.

அதை தொடர்ந்து இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவ தொடங்கிய இந்த வைரஸ் படிப்படியாக பல மாநிலங்களில் பரவி தமிழகத்திலும் நுழைந்தது. இந்த நிலையில் தற்போது இந்த ஒமிக்ரான் வைரஸ் நாடு முழுவதும் பரவி உள்ளது. இந்த ஒமிக்ரான் தொற்று பரவலை தொடர்ந்து நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து வந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவை, கன்னியாகுமரி உள்பட 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தாக்கம் குறையும் பட்சத்தில் ஊரடங்கை கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும் என அவர் தெரிவித்தார்.