அதிமுக தலைமையகத்துக்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா? தமிழகத் தேர்தல் அதிகாரி கூறிய பதில்!
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக் குறிப்பிடப்பட்டு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா என்று கேட்ட கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு பதில் அளித்துள்ளார்.
ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு குறித்த கருத்துகளை கேட்பதற்காக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழகத் தேர்தல் ஆணையத்தால் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என பெயரிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதிமுக அலுவலகத்தால் அந்த கடிதம் திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும் தேர்தல் ஆணையத்தால் இரண்டாவது முறையாகவும் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது அதற்கு அதிமுக தரப்பில் இருந்து அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி இல்லை அதற்கு பதிலாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவி மட்டுமே உள்ளது எனக் கூறி இரண்டாவது கடிதமும் ஏற்க மறுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு திருப்ப அனுப்பப்பட்டது. இதனை அடுத்து இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த முறையும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களை அதிகம் உள்ளனர். மிகப்பெரிய தொகுதி சோளிங்கநல்லூர் மிகச் சிறிய தொகுதி துறைமுகம். என்ற தகவல்களை கூறிய அவர் அதிமுக அலுவலகத்திற்கு இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடப்பட்டு மீண்டும் கடிதம் அனுப்பப்படுமா?என்ற கேள்விக்கு பதில் அளித்தார் அதில் அவர்
தேர்தல் ஆணையம் கொடுத்த முகவரியின் அடிப்படையில் தான் அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியின் அடிப்படையில் கடிதம் மூலமாகவும் மெசஞ்சர் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை இந்த தகவலையும் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்து விட்டோம். தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதை தான் செய்ய முடியும்.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் செய்ய முடியும். அதன் பிறகு தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என சாகு செய்தியாளர்களிடம் கூறினார்.