தமிழகத்தில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ரத்தா? மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் தமிழகத்தில் கடந்த ஆண்டு 67.86 லட்சம் குடும்பங்களுக்கு சராசரியாக 50 நாட்கள் வேலை வழங்கப் பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 59.58 லட்சம் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவர்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பயன்கள் குறித்தும், சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டமாக அது செயல்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்ய மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் முன்னாள் செயலர் அமர்ஜீத் சின்ஹா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டிருக்கிறது. குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது சில மாநிலங்களில் இத்திட்டத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிடுகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை முன்னாள் செயலாளர் அமர்ஜீத் சின்ஹா தலைமையிலான குழு அடுத்த 3 மாதங்களில் அதன் பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அக்குழுவின் முதல் கூட்டமும் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது. வல்லுநர் குழுவின் அதிகார வரம்புகளில், இத்திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இப்போது வரை ஊதியம் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது? இத்திட்டத்திற்கான செலவுகளும், பயன்களும் மாநிலத்திற்கு மாநிலம் எவ்வாறு மாறுபடுகிறது? இத்திட்டத்தின்படி சமூகம் சார்ந்த பணிகளை மட்டுமே தொடரலாமா? தனிநபர்களின் பணிகளையும் மேற்கொள்ள அனுமதிக்கலாமா? என்பது பற்றி பரிந்துரை அளிக்க வேண்டும் என்பது தான் வல்லுனர் குழுவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணி ஆகும்.
வல்லுநர் குழுவின் பணி வரம்புகளை வைத்துப் பார்க்கும் போது, குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் இந்தத் திட்டத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை செய்வது தான் என்று தோன்றுகிறது. ஆனால், வல்லுநர் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது தான் வல்லுனர் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுகின்றன.
“காலவரையற்ற இத்தகைய திட்டங்களை செயல்படுத்தும் போது அதில் முரண்பாடுகள் தோன்றுவது இயல்பு தான். எடுத்துக்காட்டாக ஏழை மாநிலமான பிகாரில் அந்த மாநில மக்களின் வறுமை நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், எந்த பயனையும் இந்தத் திட்டம் வழங்கவில்லை. அதேநேரத்தில், பணக்கார மாநிலமான கேரளத்தில் இத்திட்டத்தின்படி பயனுள்ள சொத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிகாருக்கு அதிக அளவில் நிதி வழங்க வேண்டிய தேவை உள்ளது. அதை செய்ய முடியவில்லை. அதே நேரத்தில் கேரளத்திற்கு வழங்கப்படும் நிதியையும் நிறுத்த முடியாத நிலை தான் வேலை உறுதித் திட்டத்தின் இப்போதைய கட்டமைப்பில் நிலவுகிறது” என்று வல்லுனர் குழு உறுப்பினர் கூறியிருக்கிறார்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி வழங்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தாத பிகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்; நிதியை சிறப்பாக பயன்படுத்தி பயனுள்ள சொத்துகளை உருவாக்கிய தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களுக்கு இந்தத் திட்டம் தேவையில்லை என்பது தான் வல்லுனர் குழு உறுப்பினரின் பார்வை. இந்த இலக்கை நோக்கித் தான் வல்லுனர் குழு பயணிக்குமோ? என்ற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
மத்திய அரசின் விதிகளும், மரபுகளும் சிறப்பான செயல்பாட்டை தண்டிக்கும் வகையில் தான் உள்ளன. மத்திய அரசின் வரி வருவாயில் 41% மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கிடைக்கும் வரி வருவாயின் அடிப்படையில் இது பகிர்ந்தளிக்கப்பட்டால் தமிழகத்திற்கு தான் இரண்டாவது அதிக பங்கு கிடைக்க வேண்டும். ஆனால், வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் உத்தரபிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு 18% வரைஅள்ளிக் கொடுத்து விட்டு, தமிழகத்திற்கு 4.07% மட்டுமே வழங்கப்படுகிறது.
வளர்ச்சியடைந்த மாநிலங்களைத் தண்டிக்கும் இந்த அணுகுமுறை மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகவே அமையும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் சில குறைகள் உள்ளன; இத்திட்டத்தால் வேளாண் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவது உண்மை தான். ஆனால், அவற்றைக் கடந்து இது ஒரு சிறந்த வறுமை ஒழிப்புத் திட்டம் என்பதை மறுக்க முடியாது. கரோனா காலத்தில் இந்த உண்மை அனைவராலும் உணரப்பட்டது. இத்திட்டத்தால் தமிழகத்தில் கடந்த ஆண்டு 67.86 லட்சம் குடும்பங்களுக்கு சராசரியாக 50 நாட்கள் வேலை வழங்கப் பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 59.58 லட்சம் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உள்ள குறைகளை களைவது, வேளாண் பணிகளுக்கும் இந்தத் திட்டத்தை நீட்டிப்பது போன்ற ஆக்கப்பூர்வமான மாற்றங்களை பரிந்துரைப்பது தான் வல்லுனர் குழுவின் நோக்கமாக இருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்று கூறி தமிழகம் போன்ற மாநிலங்களில் இத்திட்டத்திற்கு மூடுவிழா நடத்த பரிந்துரைக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.