அதிகரிக்கும் கோரோனா பாதிப்பு! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகெங்கும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசானது இந்தியாவையும் விட்டு வைக்காமல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசும் இந்த வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தற்போது வரை இந்தியாவில் 4421 நபர்களுக்கு கொரோனா பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 326 பேர் குணமடைந்து விட்டதாகவும், 114 இறந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதியுள்ள 3981 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்குமாறு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பின் நிலவரத்தை ஆய்வு செய்த நிபுணர்களும் ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கோரிக்கைகளுக்கு ஏற்ப ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் தற்போதுள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.