ஆடு திருடி செட்டிலாக இருந்த நிலையில், காட்டி கொடுத்த கேமரா!
தங்கள் வாழ்வை மேம்படுத்த மற்றவர்கள் எப்படி போனால் என்ன என்ற மனநிலை கிட்டத்தட்ட அனைவரையும் ஆட்கொண்டுவிட்டது. ஒரு சிலரே இன்னும் நல்ல குணம் மாறாமல் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றனர். தன் தொழிலுக்கு உதவியாக இருக்கட்டும் என வைத்தவர் அவரை ஏமாற்றி தன் வாழ்வை சிறப்படைய செய்ய ஒருவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் பாவம் கண்காணிப்பு கேமரா காட்டி கொடுத்து விட்டது.
பெங்களூர் நகரில் சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கும்பாரஹள்ளி என்ற பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் ஆவார். இவர் ஆடுகள் வளர்க்கும் தொழிலை செய்து வந்து கொண்டு இருக்கிறார். நந்தகுமார் 44 ஆடுகளை வாங்கி வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை பார்த்து கொள்வதற்காக ராஜு என்பவரை அவர் வேலைக்கு வைத்திருந்தார். அவர் மேலும் கும்பாரஹள்ளியில் உள்ள ஆடுகள் கொட்டகை அருகிலேயே குடிசை அமைத்து கொடுத்து ராஜு மற்றும் அவரது மனைவி தங்கி கொள்ளவும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் ஆந்திராவில் தனது உறவினர் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக கூறி ராஜு தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றிருந்தார். அதன் பின்னர் கடந்த மாதம் 22ம் தேதி ஆந்திராவில் இருந்து அவர் மட்டும் மீண்டும் பெங்களூருக்கு திரும்பி உள்ளார். அன்று ஆடுகள் மேய்க்கும் பணியில் ராஜு ஈடுபட்டார். ஆனால் மறுநாள் காலையில் நந்தகுமாருக்கு சொந்தமான 44 ஆடுகளும் திருட்டுப்போய் விட்டது. மேலும் ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபட்டு இருந்த ராஜுவும் மாயமாகி விட்டார்.
சற்றும் யோசிக்காமல் இது குறித்து சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் நந்தகுமார் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜுவை தேடி வந்தார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்த போது அதில் அந்த காட்சி பதிவாகி இருந்தது. ஒரு சரக்கு வாகனத்தில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு ராஜு செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த வாகனத்தின் பதிவு எண் மூலமாக ஆந்திர மாநிலம் தர்மாவரத்தை சேர்ந்த சரக்கு வாகனம் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து தர்மாவரத்திற்கு சென்ற போலீசார், ஆடுகளை கடத்திய ராஜு மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரையும் கைது செய்தார்கள். நந்தகுமாரிடம் ஆடுமேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்த ராஜு தனது கூட்டாளிகள் மூலமாக ஆடுகளை திருடி சென்று விற்று விட்டு எளிதாக பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டி இருந்தது தெரிந்தது. ராஜு, அவரது கூட்டாளிகளிடம் இருந்து 44 ஆடுகள் மற்றும் ஒரு சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேர் மீதும் சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.