MDMK DMK: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக அமர வாய்ப்பு கிடைக்குமா என்பது உறுதியாகாத நிலையில், திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடரும் என கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியது: “திமுக ஆட்சி சவால்களுக்கிடையே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சில குறைகள் இருந்தாலும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மக்கள் நலனுக்காக திமுக அரசு முயற்சி செய்கிறது,” என்றார்.
அதே நேரத்தில், வைகோவுக்கு மீண்டும் ராஜ்யசபா பதவி வழங்கப்படும் என துல்லியமாக எதையும் சொல்ல முடியாது, அதனால் கூட்டணியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று துரை வைகோ உறுதி செய்தார். அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான செயல்திட்டம் குறித்தும் அவர் பேசினார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மதிமுக வலுவான தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், தொழிலாளர்களுக்காக தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் மே 1 ஆம் தேதியின் வரலாறையும் அவர் பகிர்ந்தார். அந்தவகையில் “1990-ஆம் ஆண்டு, ராஜ்யசபாவில் மே தினத்தை ஊதியத்துடன் கூடிய தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என வைகோ முன்மொழிந்ததை அப்போது பிரதமராக இருந்த வி.பி. சிங் ஏற்றார். அதன் பின்னரே அந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது,” என்று பெருமிதத்துடன் பகிர்ந்தார்.
மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரே நோக்கத்தில் – தொழிலாளர் நலனுக்காக போராடும் இயக்கம் என தெரிவித்தார். இவர் பேட்டியளித்ததன் மூலம் இவர்கள் கூட்டணி உறுதியாக உள்ளதை வெளிப்படை தன்மையுடன் காட்டுகிறது.