பலபேரைக் கொன்ற கொரோனா வைரஸ்:ஒரு பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறது!எப்படித் தெரியுமா?

Photo of author

By Parthipan K

பலபேரைக் கொன்ற கொரோனா வைரஸ்:ஒரு பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறது!எப்படித் தெரியுமா?

சீன மக்களிடையே பீதியைக் கிளப்பி இருக்கும் கொரோனா வைரஸ்  பெயரை சொல்லி ஒரு பெண் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். 10000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கண்டுபிடித்து மக்களுக்கும் அரசுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர் லீ வென்யவாங்கையே பலி கொண்டுள்ளது இந்த வைரஸ். இதனால் சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இன்று அச்சுறுத்தும் ஒரு பெயர் உண்டு என்றால் அது கொரோனாதான். இப்படிப்பட்ட கொடூரமான ஒரு வைரஸின் பெயர் ஒரு பெண்ணை காப்பாற்றி இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

கொரோனா வைரஸின் பிறப்பிடமான வூஹான் நகருக்கு அருகில் உள்ளது ஜிங்ஷாய் எனும் நகர். இந்த நகரில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து திருட முயன்றுள்ளார் ஒரு நபர். அப்போது அந்த வீட்டில் தனியாக இருந்த  பெண்  ஒருவர் தனியாக தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அந்த பெண்ணைப் பார்த்த திருடும் ஆசையைக் கிடப்பில் போட்டுவிட்டு அவரை வல்லுறவு செய்ய முயன்றுள்ளார். அந்த இளைஞரைப் பார்த்து அந்த பெண் சத்தம் போட ஆரம்பித்துள்ளார். இதனால் அவரின் கழுத்தைப்பிடித்து நெறுத்து சத்தம் வராமல் தடுத்துள்ளார் அந்தநபர்.

இதனால் அந்த பெண்ணுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. அந்த இருமலை வைத்துத் தப்பிக்க நினைத்த அப்பெண் தொடர்ந்து இரும ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரம் இருமிய அவர் திருடனிடம் தான் வூஹான் மாகாணத்தில் இருந்து வந்துள்ளதாகவும் தனக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தனிமைப்படுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

இதைக்கேட்ட அந்த நபர் தப்பித்தால் போதுமென்று அந்த இடத்தை விட்டு அலறியடித்து ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் போலீஸில் புகாரளிக்க அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.