சர்கார் பட பாணியில் கள்ள ஓட்டு போடப்பட்ட தனது ஓட்டை போராடி பெண் ஒருவர் வாக்களித்துள்ளார்.
‘சர்கார்’ திரைப்படம் தளபதி விஜயின் நடிப்பில் 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்தது. எ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் ஆகும். முழுக்க முழுக்க அரசியல் விழிப்புணர்ப்பவை வெளிக்கொண்டு வந்த திரைப்படம்.
வெளிநாட்டில் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் சுந்தர் ராமசாமி (விஜய்) ஓட்டு போடுவதற்காக இந்தியா திரும்புவார். வாக்குசாவடிக்கு சென்ற பின் தான் அவருடைய ஓட்டை வேறொருவர் போட்டது அவருக்கு தெரிய வரும். தனது வாக்குரிமைக்காக போராடி 49 பி படிவத்தின் மூலம் தனது ஓட்டை செலுத்துவார். மேலும் அரசியலின் அவல நிலையை கண்டு மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி கட்சிசார்பற்ற அரசியல் களம் காண்பது போல் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும்.
இதே போன்று காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் செய்திருக்கிறார்.
இவர் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி குமாரவேல் என்பவரின் மனைவி பார்வதி (30) இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. பார்வதி அவரது வாக்காளர் அடையாள அட்டையை தனது பிறந்த ஊரான சிங்காடிவாக்கத்தில் இருந்து உத்திரமேரூர் பகுதிக்கு மாற்றாமல் இருக்கிறார்..
நேற்று நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க தனது பிறந்த ஊரான சிங்காடி வாக்கத்தில் உள்ள வாக்குசாவடி மையத்திற்கு சென்றார். பார்வதி செல்வதற்கு முன்பே அவரது ஓட்டை கள்ள ஓட்டாக மற்றொருவர் பதிவு செய்து விட்டார். பார்வதி அதிர்ச்சி அடைந்து வாக்குப்பதிவு மைய அலுவலரிடமும், வேட்பாளர்களின் முகவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து பார்வதி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சர்க்கார் படத்தில் விஜய் ஓட்டை செலுத்தியதை போல 49 பி படிவத்தை பார்வதிக்கு வழங்கி சேலஞ்ச் ஓட்டை பதிவு செய்ய வைத்தனர்.
நம்மில் பலரால் அறியப்படாத இந்த சட்டப் பிரிவு, தளபதி விஜயின் ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு பரவலாகத் தெரியவந்தது. ‘நோட்டா’வின் சட்டப்பிரிவான ‘49 ஓ’ போல, ‘49 பி’யும் மக்கள் கவனத்துக்கு வந்தது.
49 பி:
உங்கள் வாக்கை வேறு யாரும் கள்ள ஓட்டாக பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரியப்படுத்தி , அவரின் கேள்விகளுக்குத் தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரைப் பதிவிட வேண்டும்.
சினிமா இன்றைய கலாச்சாரத்தை அழிக்கிறது என்று கதை பேசினாலும், இது போன்ற சில படங்கள் நம்மிடையே பல மாற்றங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது.