தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் இல்லாத வீடுகளே இருக்க முடியாது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமின்றி இது ஒரு முக்கிய அடையாள அட்டையாகவும் உள்ளது. கோடி கணக்கில் ரேஷன் அட்டைகள் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது. இந்த எண்ணிக்கையானது வருடத்திற்கு வருடம் தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில் தான் தற்போது புதிதாக 2 லட்சம் பேர் ரேஷன் அட்டைகளுக்காக விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் காரணமாக இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது இந்த இரண்டு லட்சம் ரேஷன் அட்டைகளை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் தெரிவிக்கபப்பட்டுள்ளது.
இதுக்குறித்து வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் 10.06.2024 அன்று முதல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவினர் பல வாக்குறுதிகளை அளித்து இருந்தனர். அந்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று தான் ரேஷன் கடைகளில் இனி தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்பது, இப்போது திமுக வெற்றிப்பெற்றுள்ள காரணத்தால் இனி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யும் விற்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு அதன் பிறகு நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்த வரையில் ரேஷன் கடைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த பொது விநியேக திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறது என்றும் இதில் செய்யப்படும் மாற்றங்கள் அனைத்தும் சிறப்பானதாக உள்ளதாகவும் இதனை மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் 2 லட்சம் குடும்ப அட்டைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.