கூலி கேட்ட தொழிலாளி… உயிருடன் எரித்த முதலாளிகள்..!! நடந்தது என்ன..??

Photo of author

By Parthipan K

இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் தொழிலாளியை உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் கிஷோர். இவர் அங்குள்ள மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த மதுபான கடையை சுபாஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கமல் கிஷோருக்கு கடையின் உரிமையாளர்கள் இருவரும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கமல் கிஷோர் தனது சம்பள பாக்கியை கொடுக்குமாறு இரண்டு முதலாளிகளிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கமல் கிஷோர் சம்பள பாக்கியை கொடுக்குமாறு முதலாளிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த முதலாளிகள் இருவரும் கமல் கிஷோரை கடையில் வைத்து உயிருடன் கொளுத்தி விட்டனர். பின்னர் பாதி எரிந்த நிலையில் இருந்த கமல் கிஷோரின் சடலத்தை கடையில் மதுபான பாட்டில்கள் வைக்கும் குளிர் சாதன பெட்டியின் ஃப்ரீசரில் வைத்து விட்டனர்.

சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற கமல் கிஷோர் இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்ற காவல்துறையினர், கமல் கிஷோர் வேலை செய்த மதுபானக் கடை அருகில் இருக்கும் பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சனிக்கிழமை இரவு மதுபானக் கடையில் ஏதும் தீப்பிடித்து எரிந்தது போல் தெரிந்ததாக அப்பகுதி மக்கள் கூறினர். இதையடுத்து காவல்துறையினர் அக்கடையில் உரிமையாளர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கமல் கிஷோரை எரித்து கடையில் உள்ள ஃப்ரீசரில் சடலத்தை வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து கடையில் இருந்த ஃப்ரீசரில் கமல் கிஷோரின் பாதி எரிந்த உடலை காவல்துறையினர் பார்த்து உறுதி செய்தனர். மேலும், இதுகுறித்து கமல் கிஷோரின் குடும்பத்தினர் கூறுகையில், இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் அவரின் முதலாளிகள் அவரை உயிருடன் எரித்து கொன்றதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மதுபானக்கடை உரிமையாளர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதற்காக கடையின் உரிமையாளர்களே அவரின் தொழிலாளியை உயிருடன் தீவைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.