இறைச்சியில் புழுக்கள்! ஹோட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ்! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

Photo of author

By Amutha

இறைச்சியில் புழுக்கள்! ஹோட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ்! உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் உள்ள தாபா ஹோட்டல் ஒன்றில் ஆடு மாடு கோழி மீன் வகைகளை பயன்படுத்தி உணவு சமைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை அடுத்து அந்த தாபாவிற்கு சில இளைஞர்கள் உணவு அருந்த சென்றனர். அப்போது அவர்கள் தருவித்த இறைச்சியிலும் உணவிலும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவர்கள் ஹோட்டல் உரிமையாளரிடமும் ஊழியர்களிடமும் ஏன் இவ்வாறு சுகாதாரமற்ற பழைய இறைச்சிகளை சமைத்து  மக்களுக்கு காசுக்காக வழங்காதீர்! என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் அந்த இளைஞர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருணிடம்  இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததை பற்றி புகார் தெரிவித்தனர். அடுத்து அவரின் உத்தரவின் பெயரில் வட்ட பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் சென்று சம்பந்தப்பட்ட ஹோட்டலை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது ஹோட்டலில் சமைக்க வைத்திருந்த மூன்று கிலோ கெட்டுப் போன இறைச்சியை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர்.  மேலும் இறைச்சியில் புழு இருந்ததற்கான உரிய விளக்கம் அளிக்க கோரி உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஹோட்டல் உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இதுபோன்ற கெட்டுப் போன இறைச்சி வகைகளை பயன்படுத்தினால் ஹோட்டல்  உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.