ராணுவத்தின் தியாகத்தை கொச்சைப்படுத்திய பிரபல எழுத்தாளர் தேசத் துரோக வழக்கில் கைது!
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் கடந்த 3ஆம் தேதி மாவோயிஸ்ட் நடத்திய திடீர் தாக்குதலில் 22 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் கோப்ரா பிரிவை சேர்ந்த ஒரு வீரரையும் பிடித்துச் சென்றனர்.
உயிரிழந்த வீரர்களிடம் இருந்த ஆயுதங்களை எடுத்துச் சென்ற மாவோயிஸ்டுகள், அதன் புகைப்படத்தை வெளியிட்டனர். மேலும், தாங்கள் பிடித்து வைத்திருந்த வீரரின் படத்தையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
அவர்களிடம் இருந்து துணை ராணுவ வீரரை விடுவிக்க வேண்டும் என, வீரரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, வீரர்களின் தியாகத்தை இழிவுப்படுத்தும் வகையில் அசாம் மாநில எழுத்தாளர் ஷிகா ஷர்மா சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டடிருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சம்பளம் வாங்கும் நபர்கள் பணியின்போது உயிரிழந்தால் தியாகிகளாக மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மின்துறையில் பணியாற்றும் நபர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தால் அவரையும் தியாகி என்று அழைக்கப்படுவாரா? என்றும், ஊடகங்கள் அவர்களை (உயிர்த்தியாகம் செய்த வீரர்களை) உணர்வுப் பூர்வமாக கொண்டு செல்லாதீர்கள் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஷிகா ஷர்மா மீது தேச துரோகத்திற்கான 124ஏ, 294ஏ, 500 மற்றும் 506 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்தனர். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் ஆணையிட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.