“நடிச்சதே நாலு சீன்… எதுக்கு இப்படி பண்றீங்க..” ஆதங்கத்தைக் கொட்டிய யோகி பாபு
யோகி பாபு சமீபத்தில் பதிவிட்டுள்ள டிவீட் ஒன்று இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க சென்றுவிட்டதால் தமிழ் சினிமாவில் இப்போது யோகி பாபுவுக்கு செம்ம டிமாண்ட். பல திரைப்படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வரும் அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மண்டேலா அவர் மீதான நம்பிக்கையை அதிகமாக்கியுள்ளது. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் உருவாகும் தாதா என்ற படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இப்போது அந்த போஸ்டரை பகிர்ந்துள்ள யோகி பாபு “இந்த படத்தில் நித்தின் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவு செய்து இதைப்போன்று விளம்பரம் செய்யாதீர்கள்” எனக் கூறியுள்ளார். யோகி பாபுவின் பெயரைப் போட்டால் படத்துக்கு பிஸ்னஸ் கிடைக்கும் என்பதால் பல தயாரிப்பாளர்கள் இதுபோல செய்துவருகின்றனட்ர் என்பது குறிப்பிடத்தக்கது.