சுவையாக சில்லி சிக்கன் செய்யலாம் வாங்க!
அசைவ உணவு பிரியர்களுக்கு விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்று சிக்கன்.சிக்கனை பல விதமாக சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் சில்லி சிக்கன்.இதை எப்படி எளிமையாக சுவையாக செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்
கோழி கறி – 1 கிலோ (எலும்பில்லாதது)
சோள மாவு – 100 கிராம்
அரிசி மாவு – 4 மேஜைக்கரண்டி
முட்டை – 4
தயிர் – 2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது – 4 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 4 மேஜைக்கரண்டி
எலுமிச்சை சாறு – 2 மேஜைக்கரண்டி
வெங்காயம் – 2
குடைமிளகாய் – சிறிதளவு
தக்காளி சாஸ் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் கோழிக்கறியை வாங்கி வந்து நன்றாக தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும்.
இதன்பின்னர், அதில் சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், அரிசி மாவு, முட்டை, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிசைந்த மாவுடன் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் தூண்டகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி,வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
வதங்கிய பிறகு, அதில் குடை மிளகாயை போட்டு வதக்க வேண்டும்.
பின்னர், பொரித்து வைத்த கோழிக்கறியை அதில் போட்டு 2 நிமிடம் நன்றாக கிளற வேண்டும். பிறகு, அதில்,இஞ்சி பூண்டு விழுது, மசாலாக்கள், உப்பு, தக்காளி சாஸ் போட்டு நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.
பின்னர், சிறிது தண்ணீர் சுருண்டு வரும் வரை நன்றாக கிளற வேண்டும்.இதன் மேல் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கினால் சில்லி சிக்கன் ரெடி.