நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையாக இருப்பதாக தெரிகிறதே பிரதமரே!! காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!!
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் தற்பொழுது எழுதியுள்ள கடிதத்தில் எங்களை பொறுத்த வரை ஒவ்வொரு இந்தியரும் வாக்கு வங்கி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ” காங்கிரஸ் கட்சியின் நோக்கம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பிரித்து அவர்களுடைய ஓட்டு வங்கிக்கு அளிப்பதுதான். மதம் அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கே எதிரானது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இது போல பல பாரபட்சமான நோக்கங்கள் இருக்கின்றது. இது பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே. நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தை பார்க்கும் பொழுது நீங்கள் நம்பிக்கை இழந்து கவலையுடன் இருப்பதாக தெரிகின்றது. உங்களுடைய பேச்சு நீங்கள் தற்பொழுது இருக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல. உங்களுடைய பொய்களை உங்களின் வேட்பாளர்கள் மூலமாக மக்களிடையே பரப்ப நினைக்கின்றீர்கள்.
பரம்பரை சொத்து வரியை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முயற்சி செய்வதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் பரம்பரை சொத்து வரியை விதிக்க வேண்டும் என்று கூறியது பாஜக கட்சியின் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் பாஜக தலைவர்கள் தான்.
நீங்கள்(பாஜக) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கின்றது என்ன உத்திரவாதம் இருக்கின்றது என்பதை படித்து தெரிந்து கொள்ளும் அளவுக்கு வாக்காளர்கள் அனைவரும் புத்திசாலியாக இருக்கின்றனர்.
கடந்த பத்து ஆண்டு பாஜக கட்சியின் ஆட்சியில் நீங்களும்(பிரதமர் நரேந்திர மோடி) உங்களுடைய அமைச்சர்களும் சீனாவை திருப்திபடுத்தியதை நாங்கள் பார்த்து வந்துள்ளோம். சீனாவை ஊடுருவல்காரர்கள் என்று நீங்கள் இப்பொழுதும் கூறாமல் மறுக்கிறீர்கள். சீனாவில் இருந்து யாரும் இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை என்று நீங்கள் இப்பொழுதும் கூறுவது கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பது போன்று உள்ளது.
நடந்து முடிந்த முதல் இரண்டு கட்ட தேர்தல்களில் குறைவான வாக்குப்பதிவு ஆனது குறித்து நீங்கள். மிகவும் கவலைப்படுகிறீர்கள். உங்களுடைய கொள்கைகளாலும் உங்களுடைய பிரச்சாரத்தினாலும் மக்களுக்கு பாஜக கட்சிக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை இது காட்டுகின்றது.
பாஜக கட்சிக்கு மக்கள் வாக்களிக்க விருப்பமில்லை என்பது கோடை வெப்பத்தினால் நிகழ்ந்தது கிடையாது. உங்களுடைய கொள்கைகள் ஏழை மக்களை எரித்துவிட்டது என்பதே அதற்கு காரணம்.
உங்கள் ஆட்சியில் உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகள் பற்றி உங்களுக்கு ஏன் பேச விருப்பமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதற்காக நீங்கள் அனைவரும் வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வருகிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் பத்து ஆண்டுகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்த சாதனையை பற்றி பேசி ஓட்டு கேட்கலாமே.
இதை செய்யாவிட்டால் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் நீங்கள் பிரிவினையை தூண்டும் பிரதமராக மாறி விடுவீர்கள். அவ்வாறே நீங்கள் பிரிவினை பிரதமர் என்று ஒருத்தர் இருந்தார் என நினைவு கூறப்படுவீர்கள். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியரும் எங்களுடைய ஓட்டு வங்கிதான்” என்று அந்த கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் கூறியுள்ளார்.