முதலமைச்சரை கன்னத்தில் அறைந்த இளைஞர் அளித்த பரபரப்பான பேட்டி
மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த 4-ஆம் தேதி டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், டெல்லி மோத்தி நகர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கூட்டத்திலிருந்து ஒருவர் ஓடிக்கொண்டிருந்த அவரது வாகனத்தின் மீது ஏறி அரவிந்த் கெஜ்ரிவாலின் கன்னத்திலும் பளார் என அறைந்து விட்டார்.
இதனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார். உடனே அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கிய சுரேஷ் என்ற நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொது இடத்திலேயே முதல்வரை தாக்கிய அவர் மீது டெல்லி காவல் நிலையம் கிரிமினல் சட்ட பிரிவு 107/5-ன் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 5 ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தியது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சுரேஷை இரண்டு நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் இது தொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை மதிக்காமல், நான் ஏன் இப்படி செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எப்படி அறைந்தேன் என்றும் தெரியவில்லை நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல. என் பின்னணியில் யாரும் இல்லை. என்னை யாரும் தூண்டிவிட்டு நான் செய்யவில்லை. நான் செய்தது மிகப் பெரிய தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.இவ்வாறு இவர் கூறிய காரணங்கள் சம்பந்தமில்லாமல் இருப்பதால் இவர் யார்? எதற்காக அறைந்தார்? என்று எதுவும் புரியாமல் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.