வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை போதை பயன்பாட்டிற்காக விற்பனை செய்த இருவரை, காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை துரைப்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி ஆகிய பகுதியில் வலி நிவாரணி மாத்திரை, மருந்துகளை போதைக்காக அதிகம் பயன்படுத்துவதாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பெயரில், போலீசார் தனிப்படை அமைத்து கடந்த 15 நாட்களாக பெருங்குடி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வந்தனர்.
இந்நிலையில், பெருங்குடி பறக்கும் ரயில் நிலையம் அருகே வலி நிவாரணி மருந்துகளை இளைஞர் ஒருவர் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து பிடித்தனர்.
அதன் அடிப்படையில், அவரை விசாரித்த போது அவர், பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த தமிழரசன் (29) என்பதும், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த மருந்துகளை விற்றதும் தெரிய வந்தது. இதனோட ஒரு மாத்திரையை ரூ.400 முதல் 500 வரைக்கும் விற்பதாக தெரியவந்தது.
மேலும், அவரை விசாரித்தபோது அவர் கொடுத்த தகவலின்பேரில், வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் மெடிக்கல் கடையை நடத்தி வந்த வேளச்சேரியை சேர்ந்த சாதிக் பாட்ஷா (30) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதன் பின்னர், சாதிக் பாட்ஷாவின் வீட்டில் சோதனை நடத்தியபோது 2400 வலி நிவாரணி மாத்திரைகள், 100 இருமல் டானிக் பாட்டில் மற்றும் ஊசிகள் மற்றும் ரூ.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், சாதிக் பாட்ஷா ஆந்திராவுக்கு சென்று வலி நிவாரணி மாத்திரை, மருந்துகளை கள்ளச்சந்தையில் வாங்கி வந்து தமிழரசனிடம் கொடுத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய சொல்லியது தெரியவந்தது.
மாத்திரையை பொடி செய்து, திரவ கரைசலாக மாற்றி, ஊசி வழியாக உடலில் செலுத்தினால், 4 முதல் 5 மணி நேரம் வரை போதை இருக்கும். வீரியம் அதிகமான இருமல் மருந்தை, இரண்டு பாட்டில்கள் குடித்தால் போதை தெரியும். போதைக்காக இவைகளை உடலுக்குள் செலுத்தும்போது, பக்க விளைவு ஏற்படுத்தும் என தெரிந்தும், சாதிக் பாஷா விற்பனை செய்துள்ளார்.
இதில் அதிக லாபம் கிடைத்ததால் கடந்த 6 மாத காலமாக இதைன தொழிலாக செய்துள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, போதை தடுப்பு பிரிவில் சாதிக் பாட்ஷா மீது மூன்று வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற மாத்திரை, மருந்துகளை போதைக்காக பயன்படுத்தினால், உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதை பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.