காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு! ஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம்!

0
141

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலாமதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் மீது சோழவரம், வியாசர்பாடி, எம்கேபி நகர், ஆவடி டேங்க் பேக்டரி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 23 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், கொடுங்கையூர் காவல் துறையினர் திருட்டு வழக்கு குறித்து கடந்த2 நாட்களுக்கு முன்னர் ராஜசேகரை கைது செய்து கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தார்கள்0 அப்போது திடீரென்று மயங்கி விழுந்த ராஜசேகர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு, மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சூழ்நிலையில், காவல் நிலையத்தில் விசாரணை கைதி பலியான சம்பவம் குறித்து கொடுங்கையூர் சட்டம்-ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் ,துணை ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்கள், ஜெயசேகர், மணிவண்ணன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுதொடர்பான உத்தரவை சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர் ஜிவால் வெளியிட்டிருக்கிறார். அதனடிப்படையில், தற்போது 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதோடு இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி மற்றும் மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை கிண்டியிலுள்ள 12வது சிறார் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் லட்சுமி நேற்று விசாரணையை ஆரம்பித்தார். கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் ராஜசேகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய எவரெடி காலனியில் உள்ள காவல்துறை பூத் பகுதியிலும் நேரில் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார்.

அதோடு பலியான ராஜசேகரின் தாய் உஷாராணி மற்றும் அண்ணன் மணி உள்ளிட்டோர் இடம் மேஜிஸ்ட்ரேட் விசாரணை செய்தார்.

அப்போது ராஜசேகரின் தாய் உஷாராணி தெரிவிக்கும்போது என்னுடைய மகன் மீது கொடுங்கையூர் காவல் துறையில் புகார் வழக்கு எதுவுமில்லை ஆனால் வழக்கு தொடர்பாக விசாரிக்க அவனை காவல்துறையினர் அழைத்துச் சென்றார்கள். என்னுடைய மகன் இறந்தது குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் எனக்கு எந்தவிதமான தகவலும் கொடுக்கவில்லை, என்னுடைய மகனை காவல்துறையினர் அடித்து கொன்று விட்டு வலிப்பு நோய் உண்டாகி இறந்துவிட்டதாக தெரிவிக்க்கிறார்கள் இது காவல்துறையினர் செய்த சதி என்று சொல்லி விட்டு கதறி அழுதார்.

இதனைத்தொடர்ந்து மேஜிஸ்ட்ரேட் லட்சுமி பலியான ராஜசேகரின் உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் கைதி ராஜசேகரின் உடலை மருத்துவர் பாலசுப்பிரமணியம் பிரேத பரிசோதனை செய்தார்.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் ராஜசேகரின் இறப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பாக தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து ராஜசேகரின் உடலை அவருடைய உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைக்க முயற்சி செய்தார்கள், அதனால் உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்து அவருடைய உறவினர்கள் ராஜசேகரின் உடலை வாங்க மறுத்து விட்டார்கள். இதன் காரணமாக, ராஜசேகரின் உடலில் ஸ்டான்லி மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே உயிரிழந்த ராஜசேகர் மரணத்திற்கு சரியான நீதி விசாரணை வேண்டும் என கேட்டு மார்சிட்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதி செயலாளர் விஜயகுமார் தலைமையில் கொடுங்கையூர் காவல் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றுக் கொண்டு காவல்துறையினருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். அதோடு ராஜசேகரின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும், அரசு சார்பாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Previous articleஅன்னிய நாட்டு சந்தைகளில் நிராகரிக்கப்படும் இந்திய தேயிலை!
Next article14-6-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!