சமூக அக்கறையான உணர்வுபூர்வமான படம்!  தனுஷின் வாத்தி திரை விமர்சனம்! 

0
459
#image_title

சமூக அக்கறையான உணர்வுபூர்வமான படம்!  தனுஷின் வாத்தி திரை விமர்சனம்! 

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் சம்யுக்தா நடித்த படம் தான் வாத்தி. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 1990 கால கட்டங்களில் நடப்பதை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. கல்வித்துறையில் தனியார் ஆதிக்கம் மேல் மேலோங்கி இருக்கும் நிலையில் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் சமுத்திரக்கனி கட்டண கொள்ளை அடிக்கிறார். இதை தடுப்பதற்கு அரசு சட்டம் கொண்டு வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்டு அதை தடுக்க முயற்சி செய்கிறார். அதற்காக அரசு பள்ளிகளை தத்தெடுத்து தரம் உயர்த்தி தருவதாக கூறி தனியார் பள்ளியில் உள்ள திறமையற்ற ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு பாடம் நடத்த அனுப்புகிறார். அதில் கணக்கு ஆசிரியரான தனுஷூம் இருக்கிறார்.

சென்னை ஆந்திர எல்லையில் இருக்கும் சோழவரம் கிராமத்தில் பணிக்கு சேரும் தனுஷ் அங்கு குழந்தைகள் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்வதை அறிந்து அதிர்கிறார். அவர்களை கஷ்டப்பட்டு அழைத்து வந்து பாடம் நடத்தி தேர்வில் அதிக மதிப்பெண் பெற வைக்கிறார்.

இதனால் தனியார் பள்ளிகளின் மீதான மோகம் மக்களுக்கு போய்விடும் என எண்ணிய சமுத்திரக்கனி தனுஷிற்கு தொல்லை கொடுக்க அடியாட்களை அனுப்பி வைக்கிறார். தனுஷின் வேலையும் பறிக்கப்படுகிறது. மாணவர்களின் படிப்பும் பாதியில் நிற்கிறது. அவர்களின் படிப்பை தொடர வைத்து டாக்டர், இன்ஜினியர், கலெக்டர் என கொண்டு வர தனுஷ் முயற்சி செய்கிறார். அவரின் முயற்சி வெற்றி அடைந்ததா?  என்பதே மீதி கதை.

ஆசிரியர்களுக்கு உடைய நடை உடை பாவனைகளில் தனுஷ் மிளிருக்கிறார். தனது இயல்பான நடிப்பால் ஆசிரியர் பணிக்கு உயிர் கொடுத்துள்ளார். நெகிழ வேண்டிய இடங்களில் நெகிழ்ந்தும் மாஸ் காட்ட வேண்டிய இடங்களில் அதிரடியும் காட்டி கலக்கியிருக்கிறார். சம்யுக்தாவுக்கு குறைவான காட்சிகள் தான். ஆனால் பாடல் காட்சிகளில் அசத்தியுள்ளார்.

கோட் சூட் அணிந்து பணக்கார இடத்தில் நடிப்பில் அதிரடி காட்டியுள்ளார் சமுத்திரக்கனி. வில்லத்தனத்தில் கேரக்டருக்கு சரியான முறையில் பொருந்தி வருகிறார். நான் கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், இளவரசு, சாய் குமார் ஆகியோர் தங்கள் பங்கிற்கு சரியாக நடித்துள்ளனர். படத்தின் ஒரு காட்சியில் இயக்குனர் பாரதிராஜா வந்து போகிறார்.

ஜிவி பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. வா வாத்தி பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் தூண்டும் வகையில் இசையமைப்பில் வலு சேர்த்துள்ளார். யுவராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக உள்ளது. கதையை சரியான முறையில் நகர்த்தி செல்கிறது.

பார்த்த காட்சிகள் தான் என்றாலும் ஆங்காங்கே தென்படும் தெலுங்கு பாடல் படத்திற்கு மைனஸ் பாயிண்டை சேர்க்கிறது.

கல்வியின் சிறப்பையும் கல்வி கற்றால் சமூகத்தில் முன்னேறலாம் என்பதையும், சமூக அக்கறையோடு உணர்வுபூர்வமாக சொல்வதில் இயக்குனர் வெங்கி அட்லூரி நல்ல ஸ்கோர் செய்துள்ளார்.

மொத்தத்தில் வாத்தி அடி பின்னுகிறார்.

Previous articleஇரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!!
Next articleசிறுமியை திருமணம் செய்ய நினைத்த தாத்தா & சித்தப்பா!  தாயும் உடந்தை  புகாரின் பேரில் வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!