சொந்த கட்சிக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் பாஜக.. போஸ்டர் ஒட்டி அசிங்கப்படுத்திய சம்பவம்..!!
தமிழகத்தில் தேர்தல் முடிந்திருந்தாலும் இன்னும் அதன் பரபரப்பு ஓயவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில் தினமும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து வருகிறது. அந்தவகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் ஒரு முரட்டு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது விருதுநகர் தொகுதியில் தேர்தல் வேலைகள் மற்றும் பாஜக பூத் ஏஜென்ட்களுக்காக பாஜக கட்சி தலைமையில் இருந்து ஒரு கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளனர். ஆனால், இதில் இருந்து சுமார் 40 லட்சம் ரூபாய் வரை பாஜக நிர்வாகிகள் அடித்துவிட்டதாக பாஜகவினரே புகார் கூறியுள்ளதோடு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
பாஜக கட்சி தலைமையில் இருந்து மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிகுமார், பாஜக விருதுநகர் தொகுதி அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி மற்றும் செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் ஆகிய 4 பேரையும், விருதுநகர் தொகுதியில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து இருந்தது.
இந்நிலையில் இவர்கள் நான்கு பேரின் புகைப்படத்தையும் போட்டு ”பாஜக விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி. பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் ரூபாய் 40 லட்சம் வரை சுருட்டிய இந்த 4 பேர் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாஜக நிர்வாகிகளே போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே கிழித்து எறியப்பட்டுள்ளது. இருந்தாலும் பாஜக கட்சிக்குள்ளேயே இதுபோன்ற பஞ்சாயத்துகள் எழுந்திருப்பது அக்கட்சியில் ஏற்பட்டுள்ள விரிசலை காட்டுவதாக உள்ளது.