தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்து வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு!

Photo of author

By Hasini

தனியார் பள்ளி கட்டணங்கள் குறித்து வெளிவர இருக்கும் புதிய அறிவிப்பு!

கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி குழந்தைகள் அனைவரும் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வருகின்றனர். கொரோனா ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தே இன்னும் யாரும் மீளாத நிலையில், தற்போது இரண்டாம் அலையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டணங்களைக் கட்ட முடியாமல் பெற்றோர் திணறி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிமன்றத்தில் 75 சதவீத கட்டணத்தை முறையே 40 சதவிகிதம் மற்றும் 35 சதவிகிதம் என இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ண குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும், கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளியிலிருந்து ஒருபோதும் நீக்கப்படமாட்டார்கள் என்றும் தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கட்டணத்தில் சலுகை கூறும் மாணவர்களின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடப்பு கல்வி ஆண்டிலும், நடந்து முடிந்த 2019 – 2020 ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதி அளித்து, ஜூலை 5ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது என்றும், தமிழகத்தைப் பொருத்தவரை கட்டண நிர்ணயக் குழு அளித்த பரிந்துரைகளை அரசு பரிசீலிக்கும் என்றும், கட்டண நிர்ணயக் குழுவில் உள்ள காலியிடங்கள் இரு மாதங்களில் நிரப்பப்படும் என்றும் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என்றும் மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.