பால்வாடி பள்ளியின் கூரையை பெயர்த்துக்கொண்டு பொழியும் மழை! ஆபத்தான முறையில் உறங்கும் பச்சிளம் குழந்தைகள்!
தமிழகத்தின் ஆங்காங்கே மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பல புகார்கள் வந்த வண்ணமாக தான் உள்ளது. மேலும் பல பள்ளிகள் தற்பொழுது வரை சீரமைக்கப்படாமலும் காணப்படுகிறது. சமீபத்தில் பருவமழையால் சேதம் அடைந்த பள்ளிகள் அனைத்தும் விரைவில் சீரமைத்து தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக கூறி இருந்தனர். அவ்வாறு சீரமைக்க படாமல் இருக்கும் வகுப்பறைகளில் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு அங்கன்வாடி பள்ளியில் மழை நீரானது வகுப்பிற்குள்ளேயே ஒழுகுகிறது. அவ்வாறு ஒழுகியபடி மாணவர்கள் ஆங்காங்கே உறங்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டம் கிராமியபாளையம் என்ற ஊரில் ஒரு அங்கன்வாடி உள்ளது. அந்த ஊரை சுற்றியுள்ள குழந்தைகள் தினம் தோறும் அங்கன்வாடிக்கு வருவது உண்டு.
தற்பொழுது பருவமழை ஆங்காங்கே கனமாக பெய்து வருகிறது. இவ்வாறு மழை பொழியும் பொழுது அங்கன்வாடியில் மேற்கூரைகள் ஓட்டையாக உள்ள காரணத்தினால் அதன் வழியே மழை நீர் வகுப்பறைக்குள் நுழைந்து விடுகிறது. மாணவர்களை வேறு இடத்திற்கு அழைத்து செல்லவும் இடம் இல்லாததால் மழை நீர் ஒழுகும் பாதையிலேயே படுத்து உறங்கும் நிலை உண்டாகிவிட்டது.
மழைநீர் ஒழுகும் படி குழந்தைகள் ஆங்காங்கே படுத்து உறங்கும் வீடியோவை ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது இது குறித்து பலர் புகார் அளித்துள்ளனர். இந்த அங்கன்வாடி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமலே உள்ளது. இங்கு மின்சார வசதி கூட இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு உரிய அதிகாரிகள் இதனை கவனித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.