மீண்டும் கோர தாண்டவம்..! அச்சத்தால் விழிப்பிதுங்கும் அரசு

Photo of author

By CineDesk

12 நாட்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 135 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிர்ச்சி அளித்துள்ளது.

கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை நாள்தோறும் ஆயிர கணக்கில் பதிவான கொரோனா பாதிப்பு டிசம்பர், நவம்பர் மாதங்களில் வெகுவாக குறைந்தது. 2021ம் ஆண்டில் தடுப்பூசி அமலுக்கு வந்ததால் கொரோனாவில் இருந்து விடுபடுவோம் என அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் பிப்ரவரியில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரித்து அனைவருக்கும் பீதியை கிளப்பியது. ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஆங்காங்கே தேர்தல் பிரச்சாரம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. கூட்டம் கூட்டமாக அனைவரும் ஒன்றிணைவதால் கொரோனா பரவலுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம்.

இந்த நிலையில் நேற்று மட்டும் 1,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, ஒரே நாளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. வைரஸ் பரவலுக்கு ஏற்ப உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 பேர் உயிரிழந்து வருவதாக சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது. இந்த சூழலில் தமிழக பேரிடன் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 135 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளது.

அதாவது தமிழகத்தில் கடந்த 13-ம் தேதி 695 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு பிறகு கடந்த 24-ம் தேதி, 1,636 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இந்த 12 நாட்களில் 135 சதவீதம் கொரோனா தொற்று உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அறிக்கை கூறுகிறது. இதனால் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க தமிழக அரசு ஆலோசித்து வருவதுடன் வெளியே வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அனைவரும் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.