கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை 1200 பேர் வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பாகிஸ்தான் வீரார்கள் பணியிலிருந்து வெளியேறுவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வெளியேறுவதற்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உட்பூசல், நிதி தட்டுப்பட்டு மற்றும் வேறு சில பிரச்சனைகளும் காரணம் என சொல்லப்படுகிறது.