ஆர் டி ஐ அளித்துள்ள தகவலில் இனி கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டத்திலிருந்து 1.27 லட்சம் பேருக்கு 1000 ரூபாய் வராது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2023 செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 1000 ரூபாயை வழங்கி வரும் நிலையில் தற்போது அந்த திட்டத்திலிருந்து 1.27 லட்சம் பயனாளர்களை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த அக்டோபர் வரை 1.15 கோடி பேர் வரை இந்த திட்டத்தில் பயனடைந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது 1.27 லட்சம் பெண்கள் அதிலிருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்தது.
இதன் மூலம் பயனாளிகளின் எண்ணிக்கையானது 1.15 கோடியிலிருந்து 1.14 கோடியானது. இறப்பு, அதிக வருமானம், திட்டத்தில் சேர்ந்ததும் நிலம் வாங்குதல், அரசு பணிகள் பெற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது :-
பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த திட்டம் மீண்டும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு விரைவில் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
ரேஷன் கார்டில் வசிக்கும் முகவரியில் இல்லாதவர்கள், முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் தவறாக இருப்பவர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கொடுக்கப்படும் ரூ 1000 கிடைக்காது என்றும் ரேஷன் கார்டு வைத்திருந்தாலே மகளிர் உரிமை தொகை கிடைத்துவிடும் என நினைப்பது தவறு என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.