கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்களால் தங்கத்தினை வாங்காமலும் இருக்க முடியாது. தங்கத்தின் விலை ஏன் இப்படி உயர்ந்து கொண்டே வருகிறது? என்னதான் இதற்கு காரணம்? தங்கத்தின் விலை மீண்டும் குறையுமா? குறையாதா? என்று பல சந்தேகங்கள் நம்முள் எழுந்து கொண்டிருக்கும். தங்கத்தின் விலை ஏன் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை குறித்து காண்போம்.
தங்கத்தின் விலை உயர்ந்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்த சில முடிவுகளும் காரணம் என்று கூறுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் உச்சத்தை தொட்டு வருகிறது. தற்போதே 22 கேரட் தங்கம் 1 கிராம் 8000-த்தை தாண்டி உள்ளது. தங்கத்தை இனி நினைத்து மட்டும் தான் பார்க்க முடியும் என்று எண்ணுகிற அளவிற்கு மாறிவிட்டது.
இது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார். தங்கத்தின் போக்கு வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் கூறியுள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இதனால் அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை இன்னும் உயரும் என்று தான் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை ஏன் இனியும் உயரும் என்பது குறித்து காண்போம்.
1. அமெரிக்க வங்கிகள் வட்டி மதிப்பை குறைத்துள்ளன. இதனால் டாலரின் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விளையும் உயரும். இதனால் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. அமெரிக்க ரிசர்வ் வங்கி அதன் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பு வலுவிழந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடையும்.
3. இந்தியாவிலும் தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனால் மக்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள்.
4. அமெரிக்க அதிபர் உலகம் முழுவதும் பல நாடுகள் மீது வர்த்தக போரை தொடுத்துள்ளார். வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் இந்த வரி விதிப்பை ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரி விதிப்பும், சீனா மீது 10% வரிகளையும் விதித்துள்ளார். இதன் எதிரொளிப்பாக தான் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
5. மெக்சிகோ, கனடா, சீனா ஆகியவை அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையில் முதல் மூன்று இடத்தில் இருக்கின்றன. இதில் சீனா 30.2%, மெக்சிகோ 19%, கனடா 14% வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன.
6. டிரம்ப் அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில் ட்ரம்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்க வர்த்தகர்கள் வேறு நாட்டு எஃக்கினை வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச அரசியலில் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
7. இதனால் உலகம் முழுக்க பொருளாதாரம் சரியும். விலை உயரும். பணத்தின் மதிப்பு குறையும். இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள்.
8. பணத்தின் மதிப்பு குறைவதால் மக்கள் உண்மையான பணமாக மாறக்கூடிய தங்கத்தில்தான் அதிகம் முதலீடு செய்வார்கள். இவ்வாறு அதிக முதலீடு தங்கத்தின் மீது செய்வதால் தங்கத்தின் விலை மேலும் உயரும்.
தங்கத்தின் விலை உயர்வு குறித்து ஆனந்த் சீனிவாசன் அவர்கள் கூறியதாவது: தங்கத்தின் விலை ஒரு கிராம் தற்போது 8000க்கு உள்ள நிலையில் எதிர்வரும் காலங்களில் 10,000 க்கு கூட மாற வாய்ப்பு உள்ளது. தங்கத்தின் விலை உயருமே தவிர குறைய வாய்ப்பு குறைவு தான். அவ்வாறே குறைந்தாலும் ரூபாய் 100 அல்லது 200 மட்டுமே குறையும். இதனால் முடிகின்ற அளவு தங்கத்தினை சேமித்து வைத்துக் கொள்வது நல்லது என்று கூறியிருக்கிறார்.