தலைமை செயலாளர் இறையன்புக்கு 1 மாதம் கெடு!! மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய மரணம் தொடர்பாக, தலைமை செயலாளர் இறையன்பு அவர்களுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 12க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு எந்த விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை என எதிர்கட்சிகள் கூறி வருகின்றன. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரண தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளதால் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்து உள்ளனர். பலபேர் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்து இருப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த செய்திகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மனித உரிமை மீறலாக கருதப்படும். இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க தமிழக அரசு தவறி விட்டது எனவும் இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த அறிக்கையில் இந்த சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ சிகிச்சை பற்றிய விவரங்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கொடுக்கப்படும் இழப்பீடு தொகை பற்றிய விவரங்கள், கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாத, கடமை தவறிய அதிகாரிகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்ற தகவல்கள் அதில் இடம்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர் வெ. இறையன்பு அவர்கள் வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.