10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Photo of author

By Anand

10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இட ஒதுக்கீடு சரியென தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இம்மாதம் 12-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 7-11-2022 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12-11-2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.