155 கிலோ கஞ்சா கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மாதவரம் ரவுண்டானா பகுதியில் 155 கிலோ கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய த்கவலின் அடிப்படையில், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஒன்றை வழிமறித்து சோதனை நடத்தியதில், பை ஒன்றில் 155 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டதாக மதுரையைச் சேர்ந்த நல்லபெருமாள், சென்னையைச் சேர்ந்த துரைராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, இருவருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.