பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தை செய்த கொடூரம்!

Photo of author

By CineDesk

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள தைல மரக்காட்டில் 13 வயதுடைய சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தை மற்றும் அவரது உறவினரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவரான பன்னீர் செல்வம். 55 வயதாகும் இவருக்கு மனைவி இந்திரா மற்றும் 13 வயதில் வித்யா என்ற மகளும் உள்ளனர். இவரது மகள் வித்யா தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே 18 ஆம் தேதியன்று சிறுமி வித்யா அவரது சகோதரியுடன் தண்ணீர் எடுக்க ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கோவில் குளத்திற்கு சென்றுள்ளார். முதலில் சிறுமி வித்யாவும் அவர் பின்னால் சகோதரியும் சென்றுள்ளனர். ஆனால் கோவில் குளத்திற்கு அருகில் சென்று  பார்த்த  போது அங்கு வித்யாவை காணாமல் போய் உள்ளார்.

இதனால் சிறுமியின் சகோதரி அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து பெற்றோரும் அவர்களது உறவினர்களும் காணாமல் போன வித்யாவை எல்லா பக்கமும் தேடியுள்ளனர். இந்நிலையில் பாப்பான்குளம் அருகேயுள்ள தைலமரக்காட்டு பகுதியில் வித்யாவின் ஆடைகள் களைந்த நிலையில் கிடந்தார். சிறுமி வித்யா கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் முகத்தில் கடுமையான காயங்களுடன் மூச்சு திணறியபடி அங்கு கிடந்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய சிறுமையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியின் தந்தை மற்றும் உறவினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் தெரிய வந்ததாவது,சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு பெற்ற மகளை நரபலி கொடுத்ததாக அவரது தந்தை பன்னீர் செல்வத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் இவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர் குமார் என்பவரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நரபலி கொடுக்க சொல்லிய மந்திரவாதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தலைமறைவான அந்த மந்திரவாதியையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சொத்துக்காக பெற்ற மகள் என்றும் பார்க்காமல் மந்திரவாதியுடன் சேர்ந்து தந்தையே கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.