சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! 

Photo of author

By Savitha

சந்தைக்கு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிப்பு! உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பிறப்பித்த உத்தரவு! 

சேலம் மாவட்டம், காருவள்ளி வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சந்தைக்கு விவசாய பொருட்களையும், கால்நடைகளையும் விற்கவும், வாங்கவும் வருவோரிடம் ஒப்பந்ததாரர் நுழைவு கட்டணம் வசூலித்து வருகிறார்.

கால்நடைகளுக்கு தலா நூறு ரூபாயும், 30 கிலோ காய்கறிகளுக்கு 50 ரூபாயும், கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாயும் நுழைவு கட்டணம் வசூலிப்பதாக கூறி, சீனிவாசன் என்ற விவசாயி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அதிக நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், பரிசீலிக்கப்படவில்லை எனவும், நுழைவு கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, விவசாயிகளிடம் ஆயிரத்து 500 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிப்பது, உழவர் சந்தையின் நோக்கமே வீழ்த்தி விடும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளிடம் நியாயமான நுழைவுக்கட்டணம் வசூலிப்பதையும், ரசீது வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.