திருச்சிக்கு மட்டும் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!
அரசு விடுமுறை தவிர பிரபலமான கோவில் திருவிழா போன்ற சில காரணங்களால் சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் திருச்சி மாவட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில் 15 ஆம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சாமி வலம் வருவார்.
பின்னர் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக ஜூன் 8ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேரோட்டம் முடிந்த பின்னர் ஏப்ரல் 17ஆம் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 18ஆம் தேதி முத்துப்பல்லாக்கும், 19ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும். இறுதியாக 23ஆம் தேதி தங்க கமல வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் திரளாக திரண்டு வருவார்கள்.